பேஸ்புக் சமூகவலையமைப்பின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் பூராகவும் சுமார் 800 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களை இது கொண்டுள்ளது.

இச் சமூக வலையமைப்பின் செல்வாக்கினை வியாபார நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் நன்கு அறிந்து வைத்துள்ளன. எனவே தான் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதில் தங்களுக்கென ஒரு பக்கத்தினைப் பேணுவதிலும் ஆர்வம் காட்டுகின்றன.

குறிப்பாக சில நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளிலும் பேஸ்புக் பாவனையை இணைக்கும் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளன.

கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் கணனிகளில் பேஸ்புக்கினை இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான மெர்சடிஸ் - பென்ஸ் தனது புதிய கார் மொடல்களில் பேஸ்புக்கினை இலகுவாக உபயோகிக்கும் வகையில் புதிய பேஸ்புக் அப்ளிகேஷன் ஒன்றினை உருவாக்கியுள்ளது.

இதற்கென அதி நவீன தொழில்நுட்பத்தில் 'mBrace2' என்ற அமைப்பொன்றும் மெர்சடிஸ் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.





திரையுடன் கூடிய இவ்வமைப்பின் ஊடாக பேஸ்புக் மட்டுமன்றி கூகுள், யெல்ப் ஆகிய இணையத்தளங்களுடனும் தொடர்பு மேற்கொள்ள முடியும்.

கார்ப் பயணம் மேற்கொள்ளும்போது இவ் அப்ளிகேஷனின் ஊடாக டைப்செய்து ஸ்டேடஸ் அப்டேட்களை மேற்கொள்ளமுடியாது. எனினும் முன்னரே பதிவு செய்து வைத்திருந்த ஸ்டேடஸ்களை பேஸ்புக்கில் பதிந்துகொள்ளமுடியும்.

நாம் எங்கு பயணம் செய்யப் போகின்றோம் என்பதனை முன்னரே காரின் நெவிகேசன் சிஸ்டத்தில் பதிவு செய்து கொள்ளமுடியும். இதன் படி நமது பயணம் தொடர்பான தகவலையும் பேஸ்புக்கில் பதியமுடியும்.

மேலும் ஒவ்வொரு இடத்தினையும் நீங்கள் கடக்கும் போது அந்த இடத்தில் வசிக்கும் உங்களது பேஸ்புக் நண்பர்கள் தொடர்பாக அறியத்தருவதுடன், நாம் பேஸ்புக்கில் 'லைக்' செய்திருந்த வியாபார நிறுவனங்கள், விடுதிகள் தொடர்பாகவும் அறியத்தரும்.

இவை அனைத்தும் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தினைக் கொண்டே செயற்படுகின்றன.

மெர்சடிஸ் நிறுவனம் கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்படி அப்ளிகேஷன்களுக்கு அப்டேட்களையும் வழங்கவுள்ளது.

எந்தவொரு 3ஜி வலையமைப்பின் ஊடாகவும் பாவனையாளர்கள் இச் சேவையைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

கூடிய விரைவில் மற்றைய கார்தயாரிப்பு நிறுவனங்களும் இவ்வசதியை வழங்கத்தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இதனால் விபத்துக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்குமென பல சமூக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

பேஸ்புக் ஏற்கனவே நமது அன்றாட வாழ்வில் பல வழிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது வாகனங்களிலும் பேஸ்புக் பாவனை வரத்தொடங்கினால் ஓட்டுநர்களின் கவனம் அதில் திரும்புமெனவும் இதனால் விபத்துகள் ஏற்படுவது நிச்சயம் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தினை கைவிடுவது சிறந்ததென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பேஸ்புக்குக்கும் பொருந்தாமலா போய்விடும்? 
___

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top